கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் இதே ஊரைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக கோவில் வளாகத்தில் கோவில் ஊழியம் பார்த்து வருகின்றனர். கோவில் ஊழியம் பார்க்கும் இவர்களுக்கு நிர்வாகம் சார்பாக ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் பரம்பரை பரம்பரையாக துளசி இலைகள் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
நாளடைவில் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் ஐந்து கடைகள் கட்டப்பட்டு வருவாய்க்காக வாடகைதாரர்களுக்கு ஏலம் விடப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு கோவில் ஊழியம் பார்க்கும் நபர்களுக்கு துளசி இலை விற்பனை செய்வதை வரைமுறைப்படுத்தும் வகையில் அறங்காவலர் குழுவினர் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கடைகள் வைத்துக் கொள்ளவும், மாத வாடகையாக 300 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு அறநிலையத்துறை உதவி ஆணையர் கையெழுத்திட்ட கடிதம் வழங்கப்பட்டது.
கோவில் ஊழியம் பார்க்கும் ஐந்து குடும்பத்தினரும் ஒரே கடையில் துளசி இலை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கடைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட 300 ரூபாய் வாடகையை கோவில் நிர்வாகம் வாங்க மறுப்பதாகவும், கடையை அப்புறப்படுத்தும் நோக்கோடு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி துளசி கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், மீறினால் கோவில் ஊழியர்களை வைத்து கடையை அப்புறப்படுத்துவோம் என கூறியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியம் பார்க்கும் ஐந்து குடும்பத்தினர் கோவில் வளாகத்தில் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராம்குமார் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை அழைத்து, நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.