ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி. இயற்கையாகவே தனுஷ்கோடி பகுதி கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாகும். வழக்கத்திற்கு மாறாக நேற்று பகலில் இருந்து கடல் சீற்றமாகவே இருந்தது. மாலை 4 மணிக்கு பிறகும் கடல் சீற்றத்துடனும், கடல் நீர் பொங்கியபடி கடற்கரை மணல் பரப்பை நோக்கியும், சாலை வரையிலும் வந்தது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது.
தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதி வரை, கடல் நீர் புகுந்தது. இதன் காரணமாக, கடலுக்குள் இருந்த ஏராளமான நண்டுகள் கரைப்பகுதிக்கு வந்து முகாமிட்டன. இங்கு கடல் சீற்றமாக இருப்பதால், தடுப்புச்சுவரும், சாலையும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
அதுபோல் தனுஷ்கோடி பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் கடல் சீற்றத்தால் சாலை முழுவதும் தடுப்புச் சுவரின் கற்கள் பெயர்ந்தும் கடலில் உள்ள பாசி மற்றும் தாழை செடிகளும் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. இந்த நிலையில், தனுஷ்கோடி பகுதியில் 5 அடி உயரத்திற்கு அலைகள் எழும்புவதால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை யாரும் தனுஷ்கோடிக்கு செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளூர் மீனவர்கள் மட்டும் தனுஷ்கோடிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
வழக்கமாக கடல் சீற்றம் இருக்கும்போது பலத்த சூறாவளி காற்று வீசும். ஆனால் ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியில் காற்று வீசாத நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.