Skip to content

10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை..

  • by Authour

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்., 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுதும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கை.. ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். போலீஸ் உதவி கமிஷனர், ஆர்.டி.ஓ., அல்லது துணை கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும். தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்படும் சிலைகளுக்கு, அதன் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். பொது இடங்களில், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறுவது அவசியம். ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். எங்கிருந்து மின்சாரம் பெறப்படுகிறது என்ற விபரத்தையும் கடிதம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் வைக்க கூடாது. இதர மதத்தை சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக்கூடாது. விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் பட்டாசு வெடிக்க கூடாது. விநாயகர் சிலைகளை மினி லாரி, டிராக்டர் வாயிலாக மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்து செல்லக்கூடாது.  சமூக விரோதிகள் சிலைகளை சேதப்படுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும். பதற்றமான இடங்களில் சிலைகள் வைத்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்பதால் அனுமதிக்க கூடாது. மசூதிகளில் தொழுகை நேரங்களில், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது. பதற்றமான பகுதிகள் வழியாகவும் அனுமதிக்க கூடாது. மற்ற வழிப்பாட்டு தலங்களை ஊர்வலம் கடக்கும் போது, பட்டாசுகளை வெடிக்கவும், மேள தாளங்களை இசைக்கவும் அனுமதிக்க கூடாது. ஊர்வலம் செல்லும் பாதையில் உரிய அனுமதி இல்லாமல் பேனர்கள் வைப்பதையும், கொடிகள் கட்டுவதையும் தடுக்க வேண்டும்.பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகளை, வரும் 30ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என டிஜிபி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!