கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது…… காவல் துறை நவீனமயமாக்கலில் தற்போது நவீன தொழில் நுட்பங்கள் கொடுத்துள்ளோம். இதுவரை 75 ஆயிரம் குற்ற நபர்களின் போட்டோ மற்றும் விடியோக்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. போலீசார் சந்தேகிக்கும் நபரின் புகைப்படத்தை வைத்தே அவரது குற்ற பின்னணியை கண்டறியும் வகையிலான மென்பொருளையும் வைத்துள்ளோம். அதனை ரோந்து போலீஸர் எளிதில் பயன்படுத்தலாம். கஞ்சா கடத்தலை தடுக்க மாநில எல்லைகளின் 6 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்துள்ளோம். கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டுவருவதை கண்காணிக்க தென்காசி, பொள்ளாச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கிறோம். மேலும் திருமணம் மோசடி, இணைய கடன் மோசடி, ஆன்லைன் சூதாட்ட மோசடி ஆகியவை குறித்து காவல் துறை சார்பில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.