Skip to content

6.4 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை- புதுகை கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை மாநகராட்சி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாமினை, மாவட்ட   கலெக்டர் .மு.அருணா,  இன்று துவக்கி வைத்து, மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினார்.பின்னர் கலெக்டர்  அருணா கூறியதாவது:

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தினம் ஒவ்வொரு ஆண்டும் இரு சுற்றுக்களாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 23.08.2024 மற்றும் 30.08.2024 ஆகிய நாட்கள் நடைபெற்ற முதல் சுற்றில் 1 முதல் 19 வயதுடைய 5,04,840 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய 1,32,271 மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. 2024-2025 ம் ஆண்டிற்கான இரண்டாவது சுற்று இன்றையதினம் 10.02.2025 மற்றும் 17.02.2025 அன்றும் தமிழ்நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயதுடைய 5,23,811 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய 1,16,532 மகளிருக்கும் என மொத்தமாக 6,40,343 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு, தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. பள்ளி செல்லாத சிறார்களுக்கும், 20 வயது முதல் 30 வயதுடைய மகளிருக்கும் (கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் நீங்கலாக) அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. மேலும் இன்றையதினம் குடற்புழு நீக்க மாத்திரை வழங்காமல் விடுபட்டோருக்கு, 17.02.2025 ம் தேதி வழங்கப்பட உள்ளது. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும் (200 மி.கி), 2 முதல் 19 வயது உள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள மகளிருக்கு ஒரு மாத்திரையும் (400 மி.கி) வழங்கப்படும்.

எனவே, குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் ரத்த சோகை சரிசெய்யப்பட்டு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றம் உருவாகிறது. மேலும், குழந்தைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் மேம்படும் மற்றும் பள்ளி வருகையில் முன்னேற்றமும் இருக்கும் என்பதால் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் இந்த மாத்திரையினை உட்கொண்டு நல்ல உடல் ஆரோக்கியத்தினை பெறலாம்

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முன்னதாக, தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, இ.ஆ.ப.,  தலைமையில்  மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

, 2024-2025 ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மாணவிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை இன்றையதினம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் புதுக்கோட்டை மாநகராட்சி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியினை சேர்ந்த மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுகளில், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) டாக்டர் .சா.ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் டாக்டர்.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), டாக்டர்.விஜயகுமார் (அறந்தாங்கி), முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், மருத்துவ அலுவலர் (கோவில்பட்டி) டாக்டர் .எஸ்.சுகன்யா, மாநகர நல அலுவலர் டாக்டர்.எஸ்.காயத்திரி, பள்ளித் தலைமை ஆசிரியர் .ச.சுச்சரிதா, பள்ளித்துணை ஆய்வாளர் .குருமாரிமுத்து, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!