நடிகர் விஜய்தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெலுங்கு திரையுலகிலும், வலைத்தளங்களிலும் தகவல் பரவி உள்ளது. விஜய்தேவரகொண்டா தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்கு பிறகு அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.
தற்போது சமந்தாவுடன் நடித்துள்ள குஷி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமாகி விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்துள்ளார். புஷ்பா படம் திருப்பு முனையாக அமைந்தது.
விஜய்தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. தற்போது இருவரும் தனித்தனி புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டனர். அந்த படங்கள் விஜய்தேவரகொண்டாவின் வீட்டில் எடுக்கப்பட்டவை என்றும், இதன் மூலம் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிப்பது உறுதியாகி உள்ளது என்றும் ரசிகர்கள் தகவல் பரப்பி வருகிறார்கள்.
நடிகை சமந்தா சமீபத்தில் விஜய்தேவரகொண்டா ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்றும், மூன்று மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் கூறியிருந்தார். இவர்கள் காதலைப் பற்றித்தான் அவர் பேசி உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.