போக்குவரத்து துறையின் நிதிநிலைமை மேம்படுவதற்கான வாய்ப்பு என்பது கிடையாது. போக்குவரத்து துறை என்பது மக்களுக்கான சேவை துறையாகும். லாபத்தில் இயங்கக்கூடிய சேவை இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு, தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 15ஆம் தேதி அரியலூர் வருகை தருகிறார். சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பின்படி ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள மகிமைபுரம் அருகே சிப்காட் அமைய உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு
நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். அதில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைய உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் அமைய உள்ளது. இதனால் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமாக உள்ள அரியலூர் மாவட்டத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். இதனையடுத்து அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேவைப்படும் அளவிற்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் தனியார் பேருந்துகளும் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது. இதன் காரணமாக அந்தந்த பகுதி மக்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் போக்குவரத்து எளிமையாக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.
இந்த ஆண்டு அரசு பேருந்துகளில் ஐந்தே முக்கால் லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றனர். இது கடந்த ஆண்டை விட மிகப்பெரிய கூடுதலான எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்தார்கள். இவ்வாண்டு ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். அதேபோல் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு மூன்றாம் தேதி ஒரே நாளில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து பயணித்தார்கள். இது வரலாற்றில் இல்லாத ஒரு சாதனையாகும். எனவே இவ்வாண்டு தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் எவ்வித சிரமம் இன்றி சொந்த ஊருக்கு செல்லவும், சென்னைக்கு திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டது. இது பல்வேறு தளங்களிலும் பாராட்டை பெற்றுள்ளது.
போக்குவரத்து துறையின் நிதிநிலைமை மேம்படுவதற்கான வாய்ப்பு என்பது கிடையாது. போக்குவரத்து துறை என்பது மக்களுக்கான சேவை துறையாகும். லாபத்தில் இயங்கக்கூடிய சேவை இல்லை. டீசல் கடுமையாக உயர்ந்த போதிலும், தமிழ்நாடு முதலமைச்சர் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கே குறைவான கட்டணம் மக்களுக்கு நிறைவான பயணம் என்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
அதே சமயத்தில் மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்து பயணம் செயல்பாட்டில் உள்ளது. மேலும் மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தொகைகளை முதலமைச்சர் போக்குவரத்துக் கழகத்திற்கு கொடுக்கிறார். இதனால் முதல் தேதியே சம்பளம் கொடுத்து பணியாளர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும் டீசல் மானியத்திற்கான தொகையும் போக்குவரத்துக் கழகத்திற்கு முதலமைச்சர் கொடுத்து விடுகிறார். எனவே போக்குவரத்து மக்களுக்கு பயன்படும் வகையில் அவர்களுக்கு எந்தவிதமான சிரமம் இல்லாமல் பயணிக்கும் வகையில் போக்குவரத்து கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறினார்.