தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இது ஒருவகையான கொசு மூலம் பரவுகிறது. எனவே வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குடந்தை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்பட பல இடங்களில் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு பாதித்தவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு வார்டு தொடங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 50 படுக்கைகள் இந்த வார்டில் போடப்பட்டுள்ளது. அதில் 10 ஐசியூ படுக்கைகள். 20 படுக்கைகள் குழந்தைகளுக்காகவும், 20 படுக்கைகள் பெரியவர்களுக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. படுக்கையில் கொசுவலைகள் கட்டப்பட்டு உள்ளன. அத்துடன் தேவையான அளவு ரத்த அணுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
டெங்கு வார்டில் அனைத்தும் சரியாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதா என இன்று காலை டீன் நேரு, திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.