கடை வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் இன்று தஞ்சாவூர் மாவட்ட வணிகர் சங்கப் பேரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நிறுவனத் தலைவர் பி.ராஜாசீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எச்.அப்துல்நசீர், மாவட்ட பொருளாளர் டி.ராஜா, மாநகரத் தலைவர் பி.சதீஷ், மாநகர செயலாளர் ஜி.பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த செப்.23ம் தேதி நடைபெற்றதில், புதிதாக கடை வாடகைக்கு 18 சதவீதம் வரி விதித்துள்ளதை ரத்த செய்ய வேண்டும்.
இந்த நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஜிஎஸ்டி விதிகளின்படி சொந்த இடத்தில் வணிகம் நடத்தும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் (கார்ப்பரேட்) இந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை செலுத்த தேவையில்லை எனவும், சொந்த இடம் வாங்க வசதி இல்லாத வாடகை இடத்தில் கடை நடத்திடும், ஒவ்வொரு சிறு வணிகரும் கடைக்கு செலுத்தும் வாடகை தொகையில் 18 சதவீதம் மாதந்தோறும் அரசுக்கு வரியாக செலுத்தியாக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு. இது சில்லரை வணிகத்தை அழிக்க முயற்சிக்கும் சதியாகும். எனவே இதை மத்திய அரசு உடன் திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்க வேண்டும். முதற்கட்டமாக மத்திய அரசின் இந்த அறிவிப்பை திரும்ப பெறக் கோரி வரும் 19-ம் தேதி தஞ்சாவூரில் உள்ள வணிகவரி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.