கரூர் மாவட்டம், புலியூரை அடுத்த உப்பிடமங்கலத்தில் கடந்த 5ம் தேதி நடந்த மாட்டுச் சந்தையில் சுங்கம் அதிகரித்து வசூலிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள், மாட்டு வியாபாரிகள், சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வெள்ளியணை காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், மேலும், அதிகாரிகள் பேச்சு வார்த்தையின் போது உடனிருந்து முடித்து வைத்தனர்.
ஏற்கனவே இருந்த நடைமுறையே அமல்படுத்தப்படும் என முடிவு எட்டப்பட்டதை அடுத்து மாட்டுச் சந்தை நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த வெள்ளியணை காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் அங்கு இருந்த ஊர் முக்கியஸ்தர்களை தாக்கியதாக கூறி, அவர்கள் ஆய்வாளரை சுற்றிக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், பொது மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் உப்பிடமங்கலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் 2 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் உப்பிடமங்கலம் சந்தை ஏலம் விடப்பட்டத்தில் பல குளறுபடிகள் நடைபெற்று இருப்பதாகவும், அதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்,
அந்தப் போராட்டத்தின் போது தாமதமாக வந்த வெள்ளியணை காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் நிலவரம் என்ன என்று கேட்காமல் அங்கு ஓரமாக நின்று கொண்டிருந்த ஊர் முக்கியஸ்தர்கள் மீது தடியடி நடத்தியதுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதனால் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.