வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை 5. 30 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை தொடங்கியது. குறிப்பாக கடலோர பகுதிகளான பழையாறு, பூம்புகார், தரங்கம்பாடி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 7 மணியில் இருந்து மயிலாடுதுறை பகுதியிலும் மழை அதிகரிக்கத் தொடங்கியது. கனமழை காரணமாக இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கலெக்டர் கூறும்போது, மறு அறிவிப்பு வரும் வரை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தஞ்சையிலும் இன்று காலை 6 மணி முதல் மழை தூறிக்கொண்டே இருக்கிறது. திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் இன்று காலை முதல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டையில் மழைக்கான அறிகுறியுடன் வானம் மேகமூட்டங்களுடன் காட்சி அளித்தது.