தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது .இதையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் 61 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடி தடைக்கால சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி தொடங்கியது.ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் கடந்த 2 மாதமாக மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த சமயத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி, மராமத்து பணிகள் செய்து வந்தனர்.
61 நாள் மீன்பிடி தடைக்கால சீசன் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாகை, அதிராம்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், கொள்ளிடம், ராமேசுவரம் துறைமுகம் கடல் பகுதியில் 5ஆயிரத்துக்கும் மேற்பபட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதற்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த படகுகள் வர்ணம் பூசப்பட்டும், பதிவு எண் எழுதப்பட்டும் புதுப்பொலிவுடன் காட்சி தந்தன.படகுகளில் மீன்பிடி வலை, மடி பலகை, ஐஸ் பாக்ஸ், டீசல் உள்ளிட்ட உபகரணங்களை மீனவர்கள் ஏற்றினர். இதன் மூலம் சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் சுமார் 1 லட்சம் மீனவர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
விசைப்படகுகள் 2 மாதமாக கடலுக்கு செல்லாததால் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக உயர்ரக மீன்களுக்கு தட்டுப்பாடு இருந்தது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் கடலுக்கு செல்லும் மீனவர்கள் நாளை இரவு, அல்லது நாளை மறுநாள் கரை திரும்புவார்கள். அதன் பிறகு மீன்கள் விலை ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.