டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். வரும் 6,7,8 என மூன்று நாட்கள் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டம், மாநாட்டில் பேசுகிறார். மக்களவை தேர்தல் பிரசாரமாகவே இதனை அவர் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ சைத்ரா பசவாவையும் அவரது குடும்பத்தினரையும் கெஜ்ரிரிவால் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
டில்லி சுகாதார அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் நேற்றிரவு 11.52 மணிக்கு பதிவு செய்த ட்வீட்டில், “நாளை (வியாழன்) காலை முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்துகிறது. கைது செய்யப்பட வாய்ப்பு” என்று பதிவிட்டுள்ளார். இதுபோல் அக்கட்சிப் பிரமுகர்கள் பலரும் இதே அச்சத்தை வெளிப்படுத்தி சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வரும் நிலையில் கெஜ்ரிவாலின் குஜராத் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டு வருகிறது.
டில்லி காவல்துறை கெஜ்ரிவாலின் வீட்டுக்கு சீல் வைத்துள்ளதுடன், அவரின் வீட்டுக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் அடைத்து, முதல்வர் மாளிகை ஊழியர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து வருகிறது என்றும், அவரை கைது செய்யும் பொருட்டு டில்லி காவல்துறை இவ்வாறு செய்கிறது என்று ஆம் ஆத்மி குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது. ஆனால், இதனை மறுத்துள்ள காவல்துறை, புதன்கிழமை முதல் முதல்வரின் வீட்டின் முன் கூடியிருந்த ஊடகவியலாளர்களை ஒழுங்குபடுத்தும் பொருட்டு அவரின் வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் முதல்வர் மாளிகை ஊழியர்கள் யாரும் காவல்துறையால் தடைசெய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.