பிரபல நடிகர் டில்லி கணேஷ் (80) வயது மூப்பின் காரணமாக, இன்று அதிகாலை சென்னையில் காலமானார். டில்லி கணேஷ் ஆகஸ்ட் 1ம் தேதி 1944ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். 1964- 1974ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் டில்லி கணேஷ் பணியாற்றி உள்ளார்.1976ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர், கமல், ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும், பசி படத்திற்காக தமிழக அரசின் சிறப்பு விருதையும் பெற்றார். வெள்ளித்திரை மட்டுமல்லாது, சின்னதிரையிலும் தனது இயல்பான நடிப்பால் கோலோச்சிய டில்லி கணேஷ், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். குணச்சித்திரம், நகைச்சுவை உள்பட எல்லா கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெ ளிப்படுத்தியவர். நடிப்பு மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞராகவும், திரைத்துறையில் பங்களித்தவர் டில்லி கணேஷ். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.