வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ம்தேதி (நேற்று) முதல் போராட்டம் நடத்த உள்ளதாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், 2 மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் கடந்த 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், உத்தர பிரதேசம், ஹரியாணா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டருடன் டெல்லியை நோக்கி புறப்பட்டனர்.
6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், டீசல் உள்ளிட்டவற்றுடன் அவர்கள் டெல்லி நோக்கி சென்றனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக, எல்லை பகுதிகளில் சீல் வைத்து பல்வேறு தடைகளை போலீசார் ஏற்படுத்தியிருந்தனர்.
தடைகளை தகர்த்து டில்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது போலீசார் நேற்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விரட்டினர்.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ‘வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்போது, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைப்படி பயிர்களுக்கு ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும்’ என்று ராகுல் காந்திஎக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.