தலைநகர் டில்லியின் ஜெய்த்பூர் (Jaitpur) பகுதியில் அமைந்துள்ள நிமா மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரான ஜாவேத் அக்தர் என்பவரை இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை மருத்துவமனைக்கு 2பேர் வந்தனர். அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு இருந்த காரணத்தால் அதற்கான சிகிச்சை (டிரெஸ்ஸிங்) அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் இருவரும் மருத்துவர் ஜாவேத் அக்தரை பார்க்க வேண்டுமென சொல்லி உள்ளனர்.
அதன் பின்னர் மருத்துவரின் அறைக்குள் நுழைந்த அவர்கள் ஜாவேத் அக்தரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து இருவரும் தப்பி சென்றுள்ளனர். இதனை பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டில்லி போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் டில்லியை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ள நிலையில் தற்போது oல்லியில் மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.