மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை 6-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. டில்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் உள்ளன. இந்த நிலையில், டில்லி அரசை கவிழ்க்கும் சூழ்ச்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும், தனது கட்சி எம்எல்ஏக்களை அக்கட்சி விலை பேசுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கேஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை பேரவையில் நேற்று தாக்கல் செய்து பேசியதாவது: எங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு, ரூ.25 கோடி வரை தருவதாக பேரம் பேசியுள்ளனர்.
பொய் வழக்குகள் பதிவு செய்வது மற்றும் மாநில கட்சிகளை உடைத்து ஆளும் அரசை கவிழ்ப்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதுபோன்று டில்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களையும் கைது செய்ய நினைக்கிறார்கள். தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதால் அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள். எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை. அவர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே நான் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
பாஜகவை பொருத்தவரை டில்லியில் ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரமாக உள்ளது. மதுபான கொள்கை விவகாரத்தை மோசடிபோல் சித்தரித்து எங்கள் கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்ப்பதே பாஜகவின் திட்டம். அவர்களின் உண்மையான நோக்கம் விசாரணை நடத்துவது அல்ல. ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கைது செய்து ஆட்சியை கவிழ்ப்பதே. இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.
முதல்வ கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. பேரவையை கவிழ்க்க நினைக்கும் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை கெஜ்ரிவால் நடத்துகிறார். இதில் அவர் வெற்றி பெறுவது உறுதி என்றபோதிலும் டில்லியில் பரபரப்பான அரசியல் சூழல்நிலை காணப்படுகிறது.