மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்த அமர்வு விசாரணை செய்த போது, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய விரும்புவதாக தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், அரசியல் தலைவர் என்பதால், பிரசாரம் செய்ய வேண்டி உள்ளது. இதனால், அவருக்கு இடைக்கால ஜாமின் குறித்த வாதங்களை கேட்போம். கெஜ்ரிவால் முதல்வராக உள்ளதால், தற்போது அசாதாரண சூழ்நிலை உள்ளது. இதனால், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது என தெரிவித்தனர். அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அரசியல்வாதிகளுக்கு என தனி விதிகளை உருவாக்கக்கூடாது. கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகவில்லை. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் அவர் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார். கெஜ்ரிவால் எதுவும் செய்யவில்லை. ஆனால், தேர்தலுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்ற கதையை வெற்றிகரமாக மக்களிடையே கட்டமைத்துள்ளனர். எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் ஜாமின் வழங்கக்கூடாது எனவும் கூறினார்.
நீதிபதிகள் கூறுகையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினால், அவர் முதல்வர் பணி செய்வதை நாங்கள் விரும்ப மாட்டோம். அப்படி நீங்கள் செய்தீர்கள் என்றால், குழப்பம் ஏற்படும். அதனை நாங்கள் விரும்பவில்லை என்றனர்.
அதற்கு கெஜ்ரிவால் தரப்பில், இடைக்கால ஜாமின் வழங்கினால், மதுபானக் கொள்கை குறித்த எந்த ஆவணத்தையும் கெஜ்ரிவால் கையாள மாட்டார் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை மே 9 ம்தேதி அல்லது அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.