டில்லி சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளன. இந்த நிலையில் டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இதில், முதல்வர் அதிஷி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
“டில்லியில் வேலையில்லாதவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். டில்லியில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பெண்களுக்கான மாதாந்திர நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்கிலும் மாதம் தோறும் ரூ.2,100 டெபாசிட் செய்யப்படும். சஞ்சீவனி திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை. தவறான தண்ணீர் கட்டணங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
இலவச குடிநீர், இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வாடகைதாரர்களுக்கும் நீட்டிக்கப்படும். போர்க்கால அடிப்படையில் கழிவுநீர் குழாய்கள் சரிசெய்யப்படும். ஒன்றரை ஆண்டுகளில் பழைய கழிவுநீர் குழாய்கள் மாற்றப்படும். ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம், குழந்தைகளுக்கு இலவச பயிற்சி, ரூ.10 லட்சம் இலவச ஆயுள் காப்பீடு, ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும். தனியார் பாதுகாவலர்களை பணியமர்த்த குடியிருப்பாளர் நல சங்கங்களுக்கு (RWA) நிதி வழங்கப்படும்” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.