இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்களைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. அவரை கைது செய்யவும், பதவி நீக்கவும் செய்ய வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின்கீழ் டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வந்த நிலையில், கடந்த 7ம் தேதி ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீராங்கனைகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்களின் போராட்டம் ஜூன் 15வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிய போட்டிகளில் விளையாட மாட்டோம் என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹரியானா மாநிலம் சோனிபட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தற்போது நாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்த வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் மனதளவில் நாங்கள் எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியாது. உளவியல் ரீதியாக வீராங்கனைகள் எத்தகைய பாதிப்புகளை சந்தித்துள்ளனர் என்பதை ஒன்றிய அரசு உணரவில்லை எனவும் கூறினார்.