தமிழகத்தில் பாஜக- அதிமுகவுடனான கூட்டணியில் அண்ணாமலையின் கருத்தால் விரிசல் நிலவுகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில், அதிமுக எனக் குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் இருவரின் மனுவை தேர்தல் ஆதிகாரிகள் ஏற்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கர்நாடகாவில் புலிகேசி நகரில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் மனுவை ஏற்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் தான் மட்டுமே கையெழுத்திட உரிமை உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். அன்றைய தினம் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.