இந்து மக்கள் கட்சி சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேசியதாக சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த நகராட்சி வார்டு கவுன்சிலரும், நாயுடு சமுதாய உறுப்பினருமான கிருஷ்ணபிரபா தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேசியதாக நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அல்லிநகரம் காவல்நிலையத்தில் அளித்த அவரது புகாரில், தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேசிய நடிகை கஸ்தூரி, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தெலுங்கு மன்னர்கள் உருவப்படத்திற்கு முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும், தவறும் பட்சத்தில் சமுதாயத்தில் சாதி ரீதியான பாகுபாட்டிற்கு வழிவகை செய்து மக்களை போராட தூண்டும் என்பதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.