Skip to content
Home » தீபாவளி பர்சேஸ் உச்சகட்டம்….. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

தீபாவளி பர்சேஸ் உச்சகட்டம்….. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

  • by Authour

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை தீபாவளி. இந்த பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது.   தீபாவளி தினத்தில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு  வெடித்து  தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். அத்துடன் இனிப்புகளை  நண்பர், உற்றார் உறவினர்களுக்கும் வழங்கி  இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே மக்கள் புத்தாடைகள் வாங்க தொடங்கினர். கடந்த 10 நாட்களாக  பர்சேஸ்  செய்ய மக்கள்  கடைவீதிகளில் குடும்பத்தோடு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால்  சென்னை தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை புரசைவாக்கம், மயிலாப்பூர், தாம்பரம்,  பிராட்வே, குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் ஒருமாதமாக  மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருச்சியின்  வர்த்தக பகுதியான மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகள், இனிப்பு கடைகள், பட்டாசுகடைகளில் கடந்த  ஒருவாரமாக வியாபாரம்  மும்முரமாக நடந்து வருகிறது.  காலை 9 மணிகே திருச்சி கடைவீதிகளில் மக்கள்  கூட்டம் அதிகரித்து விடுகிறது. இரவு 10 மணி வரை வீதிகளில் மக்கள்  நடமாட முடியாத அளவுக்கு கூட்டம் காணப்படுகிறது. வியாபாரமும் களைகட்டி உள்ளது. இது தவிர தரைக்கடைகளிலும் வியாபரம்  சூடுபிடித்து உள்ளது.

இது தவிர நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், வீட்டு உபயோக பொருட்களான டிவி, மிக்சி, வாஷிங் மிஷின்  விற்பனை செய்யும்  கடைகளிலும் மக்கள்  கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.  தீபாவளி போனஸ் வாங்கிய மக்கள்  வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதிலும், நகைகள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டினர்.  இன்று  அரச விடுமுறை என்பதால் காலையிலேயே  கடைவீதிகளில் தீபாவளி வியாபாரம் களைகட்டியது.

இதுபோல தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகை, மயிலாடுதுறை, கும்பகோணம், பெரம்பலூர், அரியலு]ர்  போன்ற நகரங்களிலும் தீபாவளி வியாபாரம்  விறுவிறுப்புடன் காணப்பட்டது. இன்று காலை  வானம்  மழை மேகத்துடன் காணப்பட்டதால் மக்கள்  மழை வருவதற்குள்  பர்சேஸ் முடித்து திரும்ப வேண்டும் என்ற  வேகத்துடன்   கடைகளில் பரபரப்புடன் காணப்பட்டனர்.

தீபாவளி புத்தாடைகளுக்கு ஏற்ப  நகை அலங்காரம் செய்வதற்காகவும்,  புத்தாடைக்கு பொருத்தமான  அணிகலன்களை  சாலையோர கடைகளில்   பெண்கள் பார்த்து பார்த்து தேர்வு செய்தனர். அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றையும் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.  இந்த கூட்டம் நாளை அதிகாலை வரை  காணப்படும் என தெரிகிறது. திருச்சி  மெயின்கார்டு கேட் பகுதியை பொறுத்தவரை ஜவுளி, நகை, இனிப்பு, பட்டாசு கடைகள் நாளை காலை வரை  திறந்து இருக்கும். விடிய விடிய வியாபாரம் நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

தீபாவளிக்காக  திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் நேரடி விற்பனை நிலையம் அமைத்து உள்ளனர். இங்கும் பட்டாசு விற்பனை  சூடுபிடித்து உள்ளது. பட்டாசு கடைகள் முன் மக்களை கவரும் வகையில் செண்டை மேள கச்சேரிகளும் 2 நாட்களாக நடந்து வருகிறது.

கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் திருச்சி மாநகர போலீசார் ஆங்காங்கே டவர் அமைத்து கூட்டத்தை  கண்காணிப்பு காமிரா மூலம் கண்காணித்து வருகிறார்கள்.  என்எஸ்பி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள  தற்காலிக  கட்டுப்பாட்டு அறையில் இருந்து இன்று   திருவரங்கம்  உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி,  பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். கூட்ட நெரிசலில் திருடர்கள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை  சாதாரண உடையிலும் ஆண், பெண் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

சென்னையில்  வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட நேற்று முதல் தங்கள் ஊர்களுக்கு  சென்று வருகிறார்கள். இதற்காக தமிழ்நாடு அரசு  சிறப்பு பஸ்கள் இயக்கி வருகிறது.  தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி  உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள்  சிறப்பு பஸ்கள் மூலம்  தங்கள் ஊர்களுக்கு திரும்பினர். இன்று காலையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை காலைவரை  சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு  வரை 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணித்து உள்ளனர்.இதுபோல சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், சேலம், கோவை போன்ற இடங்களுக்கும் செல்லும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் நேற்று ஆய்வு செய்து பயணிகளிடம்  பஸ் வசதி குறித்து நேரில் கேட்டறிந்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *