அரியலூர் மாவட்டத்தில் வெடி தயாரிப்பாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட மொத்த வெடி விற்பனையாளர்கள், தங்கள் தொழிலை சிறு தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு திருமானூர் அருகே விரகாலூர் கிராமத்தில் நடைபெற்ற வெடி விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடி தயாரிப்பாளர்கள் மற்றும் மொத்த வெடி விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தது. வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திருந்தனர். இதனையடுத்து வெடி தயாரிப்பாளர்களும் கடந்த ஒரு வருடமாக அரசு வழிகாட்டுதலின்படி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வெடி தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மனுவில், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, வெடி தயாரிப்பு இடம் மற்றும் விற்பனை இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உடனடியாக வெடி தயாரிக்கவும், விற்பனை செய்யவும் உரிய அனுமதி வழங்க வேண்டும். இந்த தொழிலில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.