Skip to content
Home » தீபாவளி பண்டிகை…பலகார வகைகள் தரமாக இருக்க வேண்டும்….அரியலூர் கலெக்டர்

தீபாவளி பண்டிகை…பலகார வகைகள் தரமாக இருக்க வேண்டும்….அரியலூர் கலெக்டர்

  • by Authour

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, பலகார வகைகளின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட, தயாரிப்பாளர் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வரும் தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான இனிப்பு, பலகார பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ, உபயோகிக்ககூடாது, ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்த கூடாது. பண்டிகை காலத்தில் மட்டும் இனிப்பு பலகாரம் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக http://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபர சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருட்களின்  பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம், காலாவதியாகும் காலம் சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

மேலும் உணவு தயாரிப்பாளர்கள், உணவு பாதுகாப்பு பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்புத்துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் .

 

எனவே, நுகர்வோர் உணவு பொருட்களை வாங்கும் போது அவற்றில் தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் விபரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் உணவு பொருட்களின் தரம் தொடர்பான புகார்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் ஆப் 9444042322 எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *