அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுகுறிச்சி கிராமத்தில் முள்ளுக்குறிச்சியிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு செல்லும் புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:, தீபாவளி பயணங்களை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த ஆண்டு நேற்றைய தினம் வரை ஒரு லட்சத்து 42,000 வரை பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் ஆண்டுக்காண்டு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்னும் முன்பதிவு அதிகரித்தால், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பயணிகள் சென்னையில் இருந்து அவர்கள் சொந்த ஊருக்கு சென்று இருக்கிறார்கள். அரசு பேருந்துகளில் இன்றும், நாளையும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு சார்பில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். அரசு கட்டணத்திலேயே, அரசு வழங்குகின்ற டிக்கெட் கொடுக்கப்பட்டு, அரசு நடத்துனர் அந்த வாகனத்தில் பயணிப்பார்கள். எனவே தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் ஏற்ற முடியாது.
ரெட் பஸ் போன்ற பேருந்து முன் பதிவு செயலியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புகார் வரும் பட்சத்தில், உடனே நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்டால், வசூலிக்கப்பட்ட கூடுதலான கட்டணம், பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் .
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.