Skip to content
Home » ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாளி உற்சவத்துடன் தீபாவளி கொண்டாட்டம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாளி உற்சவத்துடன் தீபாவளி கொண்டாட்டம்

108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்பு பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் தீபாவளி திருநாளும்  இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளிக்கு  மாப்பிள்ளைக்கு சீர் செய்வது வழக்கம். அந்த வழக்கப்படி தன் மகள் ஆண்டாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மணமுடித்து தந்த பெரியாழ்வார் தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் செய்யும் வைபவம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்  இன்றைய தினம்  சாளி உற்சவம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

நேற்று  மாலை மேள தாளங்கள் முழங்க மூலவரான பெரிய பெருமாளுக்கு எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டது.  உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  அதன்பின்னர் ரங்கநாயகி தாயார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் சன்னதிகளுக்கு எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவை அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று (31ம்தேதி) அதிகாலை ரங்கநாயகி தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு, .ெதாடர்ந்து காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார்.

 மாலை 4.45மணிக்கு சாளி அலங்காரம் நடைபெறுகிறது. பெரியாழ்வார் தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து அவரிடமிருந்து தீபாவளி சீர்வரிசை பெறுகிறார்.பெரியாழ்வாரின் சார்பில் அரையர்கள் நம்பெருமாளின் திருவடிகளை சுற்றி நாணய மூட்டைகளை சீராக வைப்பார்கள்.

நாணய மூட்டைகளுக்கு சாளி என்று பெயர். சாளி அலங்காரம் என்பது ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாக கட்டி பெருமாள் திருவடிகளில் சமர்பிப்பது. அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிரகாரத்தில் நம்பெருமாள் வலம் வருவார். மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கு காலை முதல் காத்திருக்கும் ஆழ்வார் ஆச்சாரியார்களை அழைத்து அவர்களுக்கு புத்தாடை, சந்தனம், வெற்றிலைபாக்கு, பூ, பழங்கள் உள்ளிட்டவற்றை தீபாவளி பரிசாக தந்து கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் இரவு 8.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!