ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் வெற்றிபெற்று அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்கள் ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.
கடந்த 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) வெற்றி பெற்றது. இதன்பிறகு, பல காரணங்களால் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. மீண்டும் அங்கீகாரத் தேர்தல் நடத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை உட்பட 6 ரயில்வே கோட்டங்களில் 140 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் ரயில்வே ஊழியர்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
ஓரிரு இடங்களை தவிர, பெரும்பாலான இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. இத்தேர்தலில் தபால் ஓட்டுகள் தவிர்த்து 88.91 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ள தாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதி ஓட்டுகள் எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 76,653. இதில் தபால் ஓட்டுகள் தவிர்த்து, 68,153 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 12-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. பல இடங்களில் எஸ்ஆர்எம்யு மற்றும் டிஆர்இயு இடையே கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும், முடிவுகள் என்ன என்பது விரைவில் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.