திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவருக்கு கடந்த 2013 ம் ஆண்டு வலது கண்ஆபரேசன் செய்யப்பட்டது. இதில் விஜயகுமாரிக்கு கண்பார்வை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் தனக்கு கண் பார்வை பறிபோனது என விஜயகுமாரியின் கணவர் ஸ்டாலின் திருவாரூர் சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், மருத்துவரின் அலட்சியத்தின் காரணமாக விஜயகுமாரியின் கண் பாதிக்கப்பட்டதாக கூறி விஜயகுமாரிக்கு மருத்துவ கல்லூரி முதல்வர் 5 லட்சத்து நாலாயிரத்து 941 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனஉத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆரோக்கியராஜ் இதுவரை செயல்படுத்தவில்லை. எனவே கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் சப் கோர்ட் நீதிபதி சரண்யா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். இதற்காக இன்று மதியம் மருத்துவ கல்லூரிக்கு கோர்ட் ஊழியர்கள் வந்தனர். அப்போது அங்கு டீன் இல்லை. எனவே அங்கிருந்த மற்ற டாக்டர்கள் கோர்ட் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜனவரி 6ம் தேதிக்குள் இதனை வழங்க வேண்டும் என கால அவகாசம் இருப்பதால் அதற்குள் கோர்ட் உத்தரவை நிறைவேற்றி விடுவோம் என கூறியதால் கோர்ட் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.