சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் பிரேமா. இவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இவரது கணவர் 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். பிரேமா சென்னை கிண்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்காக பல மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். நோய் இன்னும் குணமாகாததால் பிரேமாவின் மகன் விக்னேஷ் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் பிரேமாவுக்கு சுவாசக்கோளாறும் ஏற்பட்டது.
இதற்காக கீழகட்டளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பிரேமாவை பரிசோதித்த டாக்டர், அரசு ஆஸபத்திரியில் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறினாராம். இதனால் அரச டாக்டர் மீது விக்னேஷ்க்கு கோபம் ஏற்பட்டது. இன்று காலை ஆஸ்பத்திரிக்கு வந்த விக்னேஷ், பிரேமாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டார். இதில் டாக்டருக்கு 7 இடத்தில் காயங்கள் ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கத்தியால் குத்திய விக்னேசை மருத்துவமனை காவலாளிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விக்னேஷ் டிப்ளமோ படித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த துணை முதல்வர் உதயநிதி இன்று மருத்துவமனைக்கு வந்து டாக்டர் பாலாஜியை பார்த்து நலம் விசாரித்தார். டாக்டரின் குடும்பத்தினரிடமும் ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது:
கத்திகுத்து சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். கத்தியால் குத்தியவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனை டாக்டரின் பேச்சைக்கேட்டு தவறாக புரிந்து கொண்டு கத்தியால் குத்தி உள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.