முற்போக்கு எழுத்தாளர், கவிஞர், இயல் இசை நாடகம் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான திருச்சி நந்தலாலா நேற்று முன்தினம் காலமானார். நேற்று அவரது இறுதிச்சடங்குகள் நடந்தது.நந்தலாலா மறைவு செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மற்றும் பொதுவுடமை கட்சித்தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, அமைச்சர் மெய்யநாதன், திருச்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோரும் நேற்று, கவிஞர் நந்தலாலா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது: கவிஞர் நந்தலாலா அவர்கள் கலைஞர், முதல்வர் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர், கவிஞர் சிறந்த தமிழ் பற்றாளர், பொதுவுடமை கொள்கையில் தீவிர பற்று கொண்டவர். அவருடைய இறப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.
கவிஞர் நந்தலாலாவை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், அரசு சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறன்.
இவ்வாறு அவர் கூறினார்.