துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கிண்டியில் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசிடம் மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வி நிதி ரூ.2,152 கோடி வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதனை விடுவிக்க மறுத்து புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர்.
தமிழகம் மும்மொழி கொள்கையில் எப்போதுமே எதிராக தான் உள்ளது. அதனை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெளிவாக கூறியுள்ளோம். இதில் தற்போது அரசியல் செய்வதற்கு என்ன உள்ளது. யார் அரசியல் செய்வது?. மொழிப்போருக்காக பல உயிர்களை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. தமிழர்களின் உரிமை தான் கல்வி உரிமை; மொழி உரிமை. இருமொழிக் கொள்கையில் நாங்கள் தீவிரமாக இருப்பதை அரசியல் என எப்படி கூற முடியும்?. ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்பது, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தைதான்,”இவ்வாறு அவர் கூறினார்.