மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். வெளிநாடு தப்பிய தாவூத்இப்ராகிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்தது. இந்தநிலையில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தாவூத் இப்ராகிமின் தாய் அமினா பி பெயரில் மும்பை ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள 4 விவசாய நிலத்தை மத்திய அரசு ஏலம் விட உள்ளது. ஏலம் விடப்பட உள்ள 4 சொத்துகளின் ஆரம்ப விலை ரூ.19 லட்சத்து 20 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏலம் விடும் பணி மும்பையில் நடைபெறுகிறது. ரத்னகிரி தாவூத் இப்ராகிமின் சொந்த ஊராகும். சிறுவயதில் அவர் அங்கு சில காலம் வாழ்ந்து உள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு மும்பை பென்டி பஜாரில் இருந்த தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட சொத்துகள் ரூ.11 கோடிக்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதுவரை தாவூத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 11 சொத்துக்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. ஒரு உணவகம் ரூ. 4.53 கோடிக்கும்,ஆறு பிளாட்கள் ரூ. 3.53 கோடிக்கும், விருந்தினர் மாளிகை ரூ. 3.52 கோடிக்கும் விற்பனையானது.