தேனி மாவட்டம், பெரியகுளம் அடுத்த தாமரைக்குளம் அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி துளசி. தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார்.
இவர்கள் வசிக்கும் வீட்டின் முன்பாக மின்சார வயர் தாழ்வாக செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அருகில் இருக்கும் மரக்கிளைகளின் மீது உரசி தீப்பொறி வெளிப்பட்டதால் சண்முகநாதன் மின்வாரிய ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அதேப் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் லூக்காஸ் மற்றும் குமார், ‘நாங்கள் இருக்கும்போது மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக புகார் செய்வீர்களா?’ என கேட்டு சண்முகநாதனை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த சண்முகநாதன் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக சண்முகநாதனின் மனைவி துளசி மின்வாரிய ஊழியர்களான லூக்காஸ் மற்றும் குமார் ஆகியோர் மீது தென்கரை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இந்த மோதல் தொடர்பாக லூக்காஸ் மற்றும் குமார் ஆகியோரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எனவே இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் போலீசார் துளசியிடம், ‘இந்த விவகாரத்தில் உங்கள் உறவினர் பெயரிலும் வழக்குப்பதிவு செய்வோம்’ என்று மிரட்டும் விதமாக பேசியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த துளசி இன்று காலை 10 மணி அளவில் பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை முன் தனது 13 வயது மகளுடன் மண்ணெண்ணெய்யை உடலில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு போலீசாருக்கு தெரிவித்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.