தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பலலட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதை முன்னிட்டு, காளி, முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, அம்மன் உள்ளிட்ட வேடங்களை அணிவதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர். 10ம் திருநாள் அன்று மாறுவேடம் அணிந்த பக்தர்கள் அதே வேடத்தில் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி பின்னா் தான் வேடத்தை களைவார்கள்.