நடிகர் தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நயன்தாரா பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டார். இது இணையத்தில் கடுமையாக விவாதிக்கப்பட்டது. தனுஷுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், நயன்தாராவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தனுஷுக்கு நெருக்கமான வட்டாரத்தில் என்ன நடந்தது என விசாரித்தபோது அவர்கள் கூறிய தகவல்கள்:
“அன்று ‘நானும் ரவுடிதான்’ சமயத்தில் நடந்த மோதலே முதல் காரணம். ‘நானும் ரவுடிதான்’ படத்தை 6 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கினார் தனுஷ். ஆனால், அப்படம் முடிவடையும்போது படத்தின் பட்ஜெட் 18 கோடி ரூபாய். வேறொரு தயாரிப்பாளராக இருந்தால் அந்த சமயத்தில் அப்படத்தையே கைவிட்டிருப்பார்கள். ஏனென்றால், அந்தச் சமயத்தில் அப்படியொரு முதலீட்டில் வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து யாருமே ரிஸ்க் எடுத்திருக்க மாட்டார்கள்.
அதுமட்டுமன்றி, ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின்போது அதில் பணிபுரிந்தவர்களே படக்குழுவினரை சாடினார்கள். ஆனால், தனுஷ் மட்டும்தான் “விக்னேஷ் சிவனின் முதல் படமே ரொம்ப நாளானது. இந்தப் படமும் அப்படி ஆக வேண்டாம்” என்று கூறி, என்ன பிரச்சினை வந்தாலும் அதை தனதாக்கிக் கொண்டார்.
அந்தப் படப்பிடிப்பில் என்ன நடந்தது, எப்படி காதல் உருவானது உள்ளிட்டவற்றை வைத்தே முழுமையாக உருவாக்கினார்கள். அப்போதே விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரில் ஒருவர் தனுஷை நேரடியாக சந்தித்தோ, அலைபேசி மூலமாக பேசியிருந்தால் கண்டிப்பாக கொடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
அனைத்து ஆவணப்படம் பணிகளை முடித்துவிட்டு, தனுஷின் மேலாளரிடம் பேசியதுதான் பிரச்சினை. இப்போது வரை விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருமே தனுஷிடம் பேசவில்லை. தனது தயாரிப்புக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு, மரியாதைக்கு அழைத்து பேசியிருந்தால் கண்டிப்பாக தனுஷ் கொடுத்திருப்பார். எதுவுமே சொல்லாமல் பொதுவாக தனுஷ் மறுத்துவிட்டார் என்று கூறுவது தவறு.
அதுமட்டுமன்றி, ஆவணப்படம் உருவான உடனே அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தனுஷ் தரப்பிலிருந்து கூறியிருக்கிறார்கள். ஆனால், நயன்தரா தரப்போ அதையும் செய்யவில்லை. அதையும் மீறி செய்தவுடன் தான் தனுஷ் தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எதையுமே தனுஷ் தரப்பிலிருந்து சொல்லாமல் செய்யவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக தனுஷிடம் இருந்து நேரடியாக எந்தவொரு பதிலுமே இருக்காது. அனைத்தையுமே நீதிமன்றம் மூலமாகவே பார்த்துக் கொள்ளலாம் என தனுஷ் தெரிவித்துவிட்டார்” என்றனர்.