சன் டிவியில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடரில் ‘டேனியல்’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டேனியல் பாலாஜி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை உள்ளிட்ட வெற்றிப்படங்களில் மாறுபட்ட வில்லன் கதாபாத்திரம் வழங்கி சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தார்.
48 வயதான இவர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார். டேனியல் பாலாஜி உயிரிழந்த தகவலறிந்ததும் முதல் ஆளாக இயக்குனர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவரின் கண்களை தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்நின்று மேற்கொண்டனர்.
அவரின் திரைப்பயணத்திற்கு முக்கிய காரணமாக இருந்த இவர்கள், கண்ணீருடன் இறுதி பயணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இப்பொழுது, டேனியல் பாலாஜியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர்கள் விஜய் சேத்துபதி, அதர்வா உள்ளிட்டோர் அஞ்சலை செலுத்தியதோடு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
டேனியல் பாலாஜியின் மறைவை நம்பமுடியவில்லை, சித்தி தொடரில் நெகடிவ் ரோலில் நடித்த போதிலும் அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. அருமையான மனிதர், அவரது மறைவு என்னை துயரில் ஆழ்த்துகிறது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.