பட்டம் விடுதல் சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு. காலப்போக்கில் இந்த விளையாட்டும் சூதாட்ட களமாகி, பட்டத்தின் நூலில் மாஞ்சா தடவும் முறையை கண்டுபிடித்தனர். பட்டத்தின் நூலில் கோந்து மற்றும் கண்ணாடி துகள்களை தேய்த்து கொடூரமான ஆயுதம் போல அந்த பட்டத்தின் நூலை உருவாக்கி விடுகிறார்கள்.
வானில் பல பட்டங்கள் பறக்கும்போது மாஞ்சா தேய்த்துள்ள பட்டத்தின் நூல் மற்ற பட்டங்களுடன் உரசி அவற்றை அறுத்து விடும். இப்படி யார் பட்டம் அறுபடுகிறதோ அவர்கள் தோற்றவர்கள், அதிகமான பட்டங்களை அறுத்தவர் வெற்றிபெற்றவர் என போட்டி போடும் அளவுக்கு பட்டம் விடுதல் விளையாட்டு சூதாட்டமாகிப் போனது.
மாஞ்சா தடவிய 2 பட்டங்கள் உரசும்போது சில நேரங்களில் அந்த பட்டங்கள் அறுந்து வேகமாக தரையை நோக்கி வரும். வேகமாக வரும் அந்த நூல் சில நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வவோரின் கழுத்தில் பட்டு அவர்களை உயிர்ப்பலி வாங்கி இருக்கிறது. சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் திருச்சி முதலியார் சரித்திரம் பகுதியில் மாஞ்சா நூல் தயாரித்து சிறுவர்கள் பட்டம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மாடிகளில் இருந்து பட்டங்கள் விடுகிறார்கள். சில நேரங்களில் தரையில் நின்றும் பட்டங்கள் விடுகிறார்கள். மாஞ்சா நூல் அறுந்து போனால் மாஞ்சா நூல் பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாஞ்சா நூல் பட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெற்றோர்களும் இதை கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் காவல்துறை நடவடிக்கை தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.