நாமக்கல்-முசிறி-திருச்சி மார்க்கத்தில் காலையிலும், மாலையிலும் 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்படுகிறது. அரசு பஸ்களை விட தனியார் பஸ்களில் கட்டணம் குறைவு. எனவே தனியார் பஸ்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.
குறிப்பாக காலை 7 மணி முதல் 10 மணி வரை இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து தனியார் பஸ்களிலும் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு
தான் செல்வார்கள். குறிப்பாக முசிறியில் இருந்து திருச்சி நம்பர் 1 டோல்கேட் வரை கூட்டம் மிக அதிகமாக இருக்கும் அதன் பின்னர் ஓரளவு குறைந்து விடும்.
நாமக்கல்லில் இருந்து திருச்சி வரும் சில தனியார் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்குவது மட்டுமல்லாமல், பின்னால் ஏணியில் ஏறிநின்று கொண்டு பயணிப்பதும் வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதை தனியார் பஸ் கண்டக்டர்கள் கண்டித்தாலும் பயணிகள் கேட்பது இல்லை. அவர்கள் பஸ் புறப்படும்போது ஏணியில் ஏறிக்கொள்கிறார்கள்.
டோல்கேட் வந்த பின்னராவது அவர்கள் வேறு பஸ்களில் மாறி செல்லலாம். ஆனால் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையிலும் ஆபத்தான பயணம் தொடர்கிறது. பைபாஸ் சாலையில் பஸ்கள் மிக அதிக வேகத்தில் செல்லும் நிலையிலும் ஏணிப்பயணத்தை சில இளைஞர்கள் மேற்கொள்கிறார்கள்.
படியில் பயணம்…. நொடியில் மரணம் என்பார்கள்….. ஏணியில் பயணம்….எப்பவும் மரணம் என்பது போன்ற அபாயமானது என்பதை அந்த இளைஞர்கள் உணருவதாக தெரியவில்லை. எனவே போலீசாரும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் இதை கண்காணித்து அந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி அவர்களை கவனிக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற ஆபத்தான பயணத்தை தடுக்க முடியும்.