மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுவடைந்து, ‘ரேமல்’ புயலாக இன்று காலையில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவக்கூடும். அதன்பின், தீவிர புயலாக மாறி, நாளை நள்ளிரவில் வங்க தேசம் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ரேமல்’ புயல் மேற்கு வங்கத்தை நோக்கி செல்வதால், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில், கன மழைக்கான வாய்ப்பு குறையும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், இன்று பகல் நேர வெப்பநிலை இயல்பை ஒட்டி காணப்படும். நாளை முதல் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த, இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். பகல் நேர வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியஸ் அளவில் பதிவாகும். குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு, மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று மாலை வரை, மணிக்கு 90 முதல் 120 மற்றும் 135 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/புயல்-2-930x608.jpg)