வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (டானா) வலுபெற்றது. இது, வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக நாளை 24-ம் தேதி இரவு அல்லது 25-ம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (அக்.24) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (அக்.22) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும் இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.23) காலை 5.30 மணி அளவில் புயலாக (டானா) வலுபெற்று, காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் பாரதீப்புக்கு (ஒடிசா) தென்கிழக்கே 520 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்கம்) தெற்கு- தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புப்பாரவுக்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 610 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.