வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலையில் காரைக்கால் – மாமல்லபுரம் கடற்கரைக்கு பகுதிக்கு இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அப்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் முதல் காரைக்கால் வரையில் கடலோர மாவட்டங்களில் அதீத காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயல், மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டுள்ளனர். சென்னையில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.என்.நேரு ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த 2,3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நேற்று இரவு கடும் மழைப்பொழிவு இருந்தது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என செய்திகள் வெளியாகின்றன.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் பேசியுள்ளோம். பல்வேறு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் தங்கவைத்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழகம் முழுக்க கனமழையால் பாதிக்கப்பட கூடிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் கண்காணித்து வருகின்றனர். இதுவரை எந்த ஆபத்தான செய்தியும் வரவில்லை. இப்போது வரை சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை.” என்று முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.