தமிழகத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக 2 லட்சத்து 86 ஆயிரத்து 69 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 73 ஆயிரத்து 263 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன, இதனைத் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக 2 லட்சத்து 25 ஆயிரத்து 655 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 45 ஆயிரத்து 634 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலைப்பயிர்களும் சேதமடைந்துள்ளன.
ஆக மொத்தம் இதுநாள் வரை 6 லட்சத்து 30 ஆயிரத்து 621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 2 ஆயிரத்து 906 டன் வேளாண் விளைபொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் பயிர் சேதப்பரப்பு கணக்கீட்டுப் பணியை முடித்து, மாநில பேரிடர் நிவாரணத் தொகையைவிவசாயிகளுக்கு விரைவாக பெற்றுத்தரும் வகையில் அதிகாரிகள் உரிய கருத்துக்களை அரசிற்கு விரைவில் அனுப்பப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.