‘வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாழ்வு மண்டலம் நேற்று மாலை நிலவரப்படிபுதுவையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. அது மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வந்த நிலையில் திடீரென நகராமல் அப்படியே நிலைகொண்டிருந்தது. இதனால் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது.
இன்று காலை கிடைத்த தகவல் படி மிக மெதுவாக அதாவது மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. இன்று மாலை தான் அது புயலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வருகிற 30ம் தேதி காலை மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தான் கரையை கடக்கும்.
தற்போதைய நிலவரப்படி காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. அப்போது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். கரையை கடந்த பிறகு பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். தற்போது இலங்கை திரிகோணமலைக்கு 110 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகைக்கு 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு 410 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
புயல் கரையை கடக்கும்போது அதிக மழையை பொழியும். வரும் 30 மற்றும் 1ம்தேதிகளில்டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.