Skip to content
Home » ஸ்டாலின்-ராகுல் சென்னையில் சைக்கிள் ஓட்டுவது எப்போது?

ஸ்டாலின்-ராகுல் சென்னையில் சைக்கிள் ஓட்டுவது எப்போது?

  • by Senthil

அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு சிகாகோ நகரின் கடற்கரையில் சைக்கிள் ஓட்டி  உடற்பயிற்சியில் ஈடுபட்டார். இது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது.  இதைப்பார்த்த காங்கிரஸ்  தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தி, எப்போது இணைந்து சைக்கிள் ஓட்டலாம் என விடுத்த அழைப்பை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து இருக்கும் ருசிகர பதிவின் மூலம் திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி சர்ச்சைகளுக்கு இருவரும் சூசகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், பங்கேற்று நாணயத்தை வெளியிட்டார். அதனை மையமாக கொண்டு அதிமுக விமர்சனங்களை முன்வைத்தது. திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்றும் சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறும் என்றும் அதிமுக தலைவர்கள் விமர்சித்தனர். மறுபுறம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

இதனால் திமுக கூட்டணி குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், சிகாகோ நகரில் நேற்று மாலை மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டார். இதுகுறித்த காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சகோதரரே! நாம் எப்போது சென்னையில் ஒன்றாக இப்படி சைக்கிள் பயணம் செய்யப் போகிறோம்?” எனக் கேட்டு பதிவிட்டிருந்திருந்தார்.

 

ராகுல்காந்தியின் பதிவை பார்த்து, உடனே அதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “அன்புச் சகோதரர் ராகுல் காந்தி, தங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் அப்போது நாம் ஒன்றாகச் சென்னையில் பயணிப்போம்! நான் இன்னமும் தங்களுக்கு என் தரப்பில் இருந்து இனிப்புகள் வழங்க வேண்டியுள்ளது. எனவே, மிதிவண்டிப் பயணம் முடிந்ததும் எனது இல்லத்தில் இனிப்புடன் கூடிய அறுசுவை தென்னிந்திய உணவை உண்டு மகிழ்ந்திடுவோம்” என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ருசிகர பதிவின் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சைக்கு இருவரும் சூசகமாக முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
 விரைவில் முதல்வர் ஸ்டாலினம், ராகுலும் சென்னையில்  விரைவில் சைக்கிள் ஓட்டவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!