மதுரையை சார்ந்த காந்தியவாதி கருப்பையா அறிவியல், உலக சுற்றுப்புறச் சூழல், சுகாதாரம், வளர்ச்சி பற்றிய பொதுமக்களின் கவன ஈர்ப்பு விழிப்புணர்வு குறித்து சைக்கிளுடன் தேசபக்தி பாத யாத்திரையை கடந்த 21ம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆலந்தூரில் தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கியுள்ளார். நேற்று கரூர் மாவட்டம் வந்தடைந்த அவர், ஜெகதாபி என்ற கிராமத்தில் நேற்று இரவு தங்கி விட்டு காலை முதல் பாதயாத்திரை துவங்கி மதியம்
தாந்தோன்றிமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் வந்தடைந்தார். அவருக்கு கரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர். அவரை அவர்கள் வரவேற்று, வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். சுமார் 500 கி.மீ தூரம் சைக்கிளுடன் பாதயாத்திரை செல்லும் அவர், அடுத்த மாதம் 15ம் தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் பாதயாத்திரையை முடிக்க உள்ளார். கரூரிலிருந்து புறப்படும் அவர் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூர் வழியாக இஸ்ரோ வளாகத்தை சென்றடைய உள்ளார். செல்லும் வழிகளில் இவருடைய பாதயாத்திரை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், விழிப்புணர்வு கருத்துக்களை ஒலிப்பெருக்கியில் எடுத்துரைத்துச் செல்கிறார்.