தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ( எஸ்.பி.ஐ) வாடிக்கையாளர்களுக்கு மர்ம நபர்களால் அனுப்பப்படும் மோசடி செய்திகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி குறுந்தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது எஸ்.பி.ஐ யோனா வில் ரிவார்டு பணம் ரூ.9980 பெற எஸ்.பி.ஐ ரிவார்டு செயலியை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு வாட்ஸ்அப் குழுவில் போலியான குறுந்தகவல்கள் உலா வருகிறது.
இதனை உண்மை என்று நம்பி செயலியை பதிவிறக்கம் செய்பவர்களது வங்கி கணக்கு எண், இ-மெயில் ஐ.டி, வாட்ஸ் அப் எண், கிரடிட் கார்டு, பேஸ்புக், இன்ஸ்டா ஐ.டி போன்றவை மர்ம கும்பலால் ஹேக் செய்யப்பட்டு நூதன முறையில் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. எனவே இது போன்ற போலி செய்தியை யாரும் பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்க வேண்டாம்.
எஸ்.பி.ஐ வங்கி ஒருபோதும் மின்னஞ்சல், அழைப்பு, இணைப்புகள் அல்லது கோரப்படாத செயலிகளை எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்புவதில்லை.
எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் . எந்த விண்ணப்பங்களையும், கோப்புகளையும் டவுன்லோடு செய்ய வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள் என்றும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் அனைவரும் கவனமுடன் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். போலி குறுந்தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.