சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி, சென்னை மாநகர காவல்துறையில் நிர்பயா நிதியுதவியுடன் ‘அவள்’ திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. ‘அவள்’ திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டை’ முன்னிட்டு கடந்த மார்ச் 17ம் தேதி தொடங்கி வைத்தார்.
அதன்படி நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவ கல்லூரியில் ‘பெண்களுக்கான சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு’ நடந்தது. சிறப்பு விருந்தினராக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் துணை கமிஷனர் கீதாஞ்சலி கலந்து கொண்டு, சைபர் குற்றங்களின் கள நிலவரம் குறித்து பேசினார். சைபர் பாதுகாப்பு துறை வல்லுநர் வினோத் ஆறுமுகம், சைபர் குற்றங்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.