இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் மோதியது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்க வீரர்கள் பில் சால்ட், பென் டக்கெட் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன் குவித்து வலுவான அடித்தளம் அமைத்து தந்தனர். பில் சால்ட் 26, பென் டக்கெட் 65 ரன்னில் அவுட்டாகினர். பின் வந்த ஜோ ரூட் அற்புதமாக ஆடி 69 ரன் குவித்தார். 49.5 ஓவரில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன் குவித்தது.
இதையடுத்து, 305 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இங்கிலாந்தின் பந்து வீச்சை அநாயாசமாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 16.4 ஓவரில் அணியின் ஸ்கோர் 136 ஆக இருந்தபோது சுப்மன் கில் 60 ரன்னில் கிளீன் போல்ட் ஆனார்.
பின்னர் வந்த விராட் கோலி வழக்கம் போல் சொதப்பலாக ஆடி 5 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் கேப்டன் ரோகித் அதிரடியாக ஆடி 76 பந்துகளில் சதம் விளாசினார். 26.4 ஓவரில் அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 200ஐ தொட்டது. அதன் பின்னும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோகித், 119 ரன்னில் அவுட்டானார். 90 பந்துகளில் அவர் 7 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் இந்த ஸ்கோரை எடுத்தார். 44.3 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. அக்சர் படேல் 41, ரவீந்திர ஜடேஜா 11 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி உள்ளது.அடுத்த மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 12ம் தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது.
இதற்கு முன் 2023 அக்டோபர் 11ம் தேதி நடந்த உலக கோப்பை ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம் அடித்தார். 15 மாதங்களக்கு பின்னர் இப்போது தான் ரோகித் சதம் அடித்துள்ளார். ரோகித் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
நேற்று அவர் அடித்த ஒரு நாள் போட்டி சதம் 32வது சதமாகும். மொத்தமாக அவர் 49 சதங்கள் விளாசி உள்ளார். இதில் டெஸ்ட் 12, டி 20 5.
ரோகித் தனது 30 வயதை கடந்த பின்னர் 22 சர்வதேச போட்டிகளில் சதம் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.