தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் தம்பிதுரை (20), அதே பகுதியைச் சேர்ந்தவர் கேசவ மூர்த்தி (20). இருவரும் மீனவர்கள். இவர்கள் இருவருக்கும் மத்தியில் இடப் பிரச்சனை குறித்து காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்கடா கடற்கரையில் இருவரும் தங்கள் பைபர் படகுகளை நிறுத்தி இருந்தனர். கடல் அலை சீற்றம் காரணமாக அருகருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருவரின் பைபர் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இதுகுறித்து தம்பி துரைக்கும், கேசவமூர்த்திக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம்
அடைந்த கேசவமூர்த்தி, தம்பிதுரையை அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் தம்பிதுரை காயமடைந்தார். மேலும் இந்த தகராறில் கேசவ மூர்த்தி தந்தை செல்வராஜூம் காயமடைந்தார்.
காயமடைந்த இருவரும் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் ஆய்வாளர் மஞ்சுளா, சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பசாமி, தலைமை காவலர் பழனிவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கேசவமூர்த்தி, அவரது சகோதரர் வைரமூர்த்தி (23) இருவரையும் கைது செய்து, பேராவூரணி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அழகேசன் முன் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.